3/9/11

சுள்ளிப்பொறுக்க வந்த தேவதை




வழக்கம் போலே...,


பழயசோறும் ,வெங்காயம் ,பச்சைமிளகாயும்


காலை உணவாக ,


பசியாறிய மகிழ்ச்சியில்,


மாடுகளை ஓட்டிக்கொண்டு


மந்தை வழி கடந்து,


வீதி வழி நடந்து ,


காடு வந்தடைந்தேன் ,நானும் ...






அன்றாடம் என்


உடன் வரும் தோழர்களும்


இன்று காணவில்லை ...


பக்கத்து ஊர்த்


திருவிழாக்


கூத்துப் பார்த்த களைப்பில்


தூக்கம் அவளை தழுவிக்கொண்டு,


ஆதவன் வந்ததும் தெரியாமல்


திண்ணையில் உறங்குவதை


பார்த்துவிட்டுத்தான் வந்தேன் ...






என்னோடு


கூட்டி வந்த


காளையும் ,பசுவும்


காதல் வயப்பட்டு ,


கண் அசந்த வேளையில்


காணாமல் போயிற்று...






ஓட்டி வந்த


கன்னுக்குட்டி இரண்டினையும் கையோடு பூட்டிக்கொண்டு ,


காதலர்களை தேடத் தொடர்ந்தது


கால்கள் இரண்டும்...






அரை மணிநேரக் கால் நடையில்,


சோர்ந்த கண்களும் ,


"தம்பதி சமேதராய்


தோழர்கள் சிலருடன் ,


மேய்ந்து கொண்டிருந்ததையும் "


நோட்டம் விட்டது ...


தோழமை மாடுகள்


எனக்கும்


பழக்கப்பட்டவைதான்...






முன்பு ஒரு நாள்,


அக்கரையில்


"மேய்ந்திருந்த மாடுகள் ,


இளைப்பாற கண்மாயில் வாய்


வைத்த வேளையில் ,


வசீகரமாய் அருகே


பருவ மங்கை ,


கரையில் ,


தோழியுடன் சொட்டாங்காய்


விளையாடி கொண்டிருந்தாள்"


இக்கரையில் ,


முகத்தை பார்த்துவிட ,


அக்கறையுடன்


முயன்றபோதும்


ஒன்றும் நடக்கவில்லை,


நான் விரும்பியபடி ...






இங்கே ,


அவள் அருகே இருக்கக்கூடும்


என்றே மனம் இசைத்தது ..


நானும் ,


விழித்தேடலின்


முடிவில் அகப்பட்டுவிடுவாள்


என்றே சுற்றி -முற்றியும்


தேடவேச் செய்தேன்


"காணவில்லை"






ஜோடி மாடுகளைத் தேடி


வந்ததன் பயன் ,


உடல் சோர்வுற்று,


இளைப்பாற ஆலமரத்தடியில்


தலை சாய்க்க,


விழுதகளை விலக்கிக்கொண்டு


விரைந்தேன் ,


நானும் ...






மலைப்பாம்பு வேர்களில் ,


முதுகினை சாய்த்துக்கொண்டு


கன்னிமயில் ஒன்று தனிமையில்


அமர்ந்தபடி


வானொலியின் இன்னிசைக்கு ,


செவிகளை வழங்கி,


தலை அசைத்துக்


கொண்டிருந்தாள்...


என்னுள்ளும் ,


நொடியில் பல


பாடல்கள் ஒலித்தது ,


இதயத்தில் எழுந்து ..






கட்டழகு மேனி அவளை


பார்த்துகொண்டே இருந்தாலும்


போதாது விழிகளுக்கு ..


என்றபோதும்


இதுவரை


அவளைக் காணாத


விழிகள் வாழ்ந்ததும் வீணே ..!






உற்று நோக்கியே ,கண்களும்


லயித்து இருந்ததை


ஓரக் கண்ணால்


பார்த்தேவிட்டாள் ,


பாதகத்தீ !..






"யாரு நீ ?" விழியாள் வினாத் தொடுத்தாள் .


நானும் ,


"கரிசல்காடு தான் ",என்றேன் .


"இங்க இருந்துக்கவா ?"


"ஹ்ம்ம் ",என்றவாறே தலை இசைத்தாள் .


காதலர்கள் அழைத்துவந்த


கதை முழுதையும் கூறிமுடித்தேன் ..


புன்முறுவல் ...


எண்ணை வடிந்த முகத்திலும் ,


அழகு தான் ..


"இந்த மாடுலாம் யாருது ?"


"பாட்டிது .."


என்றதும்


தெளிந்தேன் .


இவள் தான்


"அன்று


அக்கரையில் அமர்ந்தவாறே ,


என் இதயவீணையில் ,


இன்பக் கீர்த்தணைகள் மீட்டியவள் "


என்று ,


மேலும் தொடர்ந்தது ,


பேச்சில் சாரல் ..


இதயத்தில் தூறல் ..






"வஞ்சிக்காடு" வீடுகளின்


குமரிகள் எல்லோரும்


பரிச்சேயம் இல்லாவிடினும் ,


எனக்கும் தோழிகள் சிலர் உண்டு ..


பள்ளி சிநேகம் தான் ...


என் தோழமை வரிசையில் இவள் இல்லை


"அந்நியம், இவள்"


என்பது மட்டும்


புலப்பட்டது ...






"தனிய இருக்க ..கூட யாரும் வரல ?"


என்று ,


வார்த்தைகளின் ஊர்வலம் முடியும் முன்பே


"ஆமா ,நான் மட்டும் தான் ..


மீனா வருவா ..இன்னைக்கு அவளுக்கு முடியல .."


"ஹ்ம்ம் ..சரி .."










வெயில் சுட்டெரிக்க ,


சோர்ந்திருந்த மாடுகள் எல்லாம்


கண்மாயில் நீர் பருக சென்றுவிட்டது ...


"சரி வா..சாப்புடுவோம்",


என்றாள் .


பசிக்கவில்லை என்றபோதும்


அவள்


அழைத்ததால் கால்கள் நகர்ந்தன ...






தூக்கில் கட்டி வந்தக்


கட்டுச்சோறு கொண்டு


வந்ததான் வேலை


முடிந்துவிட்டது ...


கழுவி ஊரணியில்


நீரும் ,


அள்ளிப் பருகிஆயிற்று ...






உண்ட மயக்கம் ,


உறக்கம் யாசித்தபோதும்


விரும்பவில்லை ...


பருவமங்கை அருகில் இருக்கும் வேளையில்


எப்படி உறங்கும் ,


விழிகள் இரண்டும் ...






அவள்


வாய் வழியே ,


வார்த்தைகளுக்கு


உயிர் கொடுக்கவில்லை ...


என்னுள்ளே எழுந்த எண்ணங்களையும்


மனதோடு மரித்துவிட்டேன்...






வானொலியில் ,


"மீண்டும் ராகதேவன் ,


காற்றலைகளில் ஓயாது ,


காதல் ஓவியம் "


தீட்டிகொண்டிருந்தார் ...






இருபது நிமிடம்


காத்திருப்பின் முடிவில்


"நேரம் ஆச்சு ..நான் சுள்ளிப் பொறுக்க வேற போகணும் .."


உயிர் பெற்ற வார்த்தைகளும்


செவிகளில் வாழ்ந்தது ...






"சுள்ளிப் பொறுக்கத் தேவை ",


எனக்கில்லாத போதும்


தனிமையிலே இனிமையேது எனக்கு


என்பதாலே ,


அவள் பாதை தொடரவே


முடிவெடுத்து ,


மாடுகளையும் கூட்டிச் செல்ல


தேடியபோது தான்


தெரிந்தது


கன்று ஒன்றை,


காணவில்லை என்று...


"நீ போ ..நான் ஓட்டிட்டு பின்னாடியே வாரேன் !"


என்றேன் அவளிடம்...






ஆலமர


நிழல் விலகி ,


என்னையும் நீங்கி ,


அவள்


நடந்தபோது தான் ,


எனக்கும் தெரியவந்தது ,


தேவதையுடன்


நேரம் கழிந்துவிட்டது


என்று .






"தேவதை ..!"


ஆம் ...


அவள் பெயர் இதுவரையில்


நான் அறியேன்.


அறிந்திருந்தேனும்


இப்படியே அழைக்கவே


இதழ்களுடன் ,


இதயமும் விரும்பியது ...






"கண்ணிரண்டு அம்புகளாய் ,


வில் புருவமேற்று ,


செவி கூடாரத்தில் ஒற்றைக் கல் தோடு,


முத்துக்கள் கோர்த்த மாலை பற்கள்


மலர் வாயில் தஞ்சமிருக்க ,


கன்னக்குழியகில் மூழ்கி போன ,


நானும் ,


கழுத்தினை , என்னவென்று


கூறுவேன் ?..


வலம்புரி சங்குதனை கழுத்து


வடிவமாக்கிய பிரம்மன் வாழ்க....


பிறை நெற்றியில் கருமைப் பொட்டு "


இது போதுமடி ,


என் கண்களும் வாழுமடி ...






தூக்கி செருகி இருந்த


பாவாடை தாவணியின் அழகினை ,


செருகி இருந்த சாவிக் கொத்தும் ,


வரிக்குதிரை கழுத்தோ !


என வியக்கும் வண்ணம்


இடையும் தெளிவுபடுத்தியது,


"தேவதை தான், இவள்" என்று ...






சந்தனக்கட்டையை ஒத்திருந்த


கையுடன் விரல்கள் ,


மணிக்கட்டில் உயிர் வாழ்கிறது


கண்ணாடி வளவிரண்டு ...






"நேற்றுதான் மருதாணி வைத்தேன் "


என்று ,


பகிரங்க


பிரசங்கப்படுத்திய


கால்களும் ,


ஒருவரி வெள்ளிக்


கொலுசு இரண்டை


மகுடமாய் சுமக்கிறது ...






"கார் மேகக் கூந்தலில் ,


வெள்ளைப் புறாக்கூட்டங்கள் "


மல்லிகை கொத்து


கீழேவிழ காத்திருந்தது ..


வாடி வதங்கி


இருந்தபோதும்


வாசம் இருந்தது ...


"பூ வாசமோ !


அவளின் வாசமோ !"


என்பதனை மட்டும்


நான் அறியேன் ...






வந்த வேலை முடிந்தது


செவலை காளை கன்றுக் குட்டி


என் விழிச் சிறையில் அடை பட ,


கை விலங்கில் பூட்டிக்


கொண்டு


அவள் திசை நோக்கிப்


பயணித்தேன் ...






மாடுகளை மேயவிட்டபின்


தேவதை அவளையும் ,


மேயந்திடவே என்


விழிகளும்


நிந்திக்கிறது ...


எனக்கும் அதில்


தடைஏதும் இல்லை ...






அவள்


ஸ்பரிஷம் தீண்டவே ,


கருவேல மரத்திலிருந்து


உயிரயும்விட்டது போலும் .


இத்தனை அழகானவள்


தீண்டுவாளேனில்,


கருவேல மரங்கள் யாவும்


காய்ந்து ,


விறகாகி போகவே


வரம் வேண்டும் ...






என்னோடு பேசிக்கொண்டே


விரல்கள் ,


விறகுகள் சேர்க்கையில் ,


முள் விறகு என்பதனை


அவளும்


மறந்துவிட்டால் முத்தமிடும் வரை !






விரலில் சொட்டு சொட்டாய்


ரத்தம் வடிய,


முத்தமிட்ட தடையம்


விட்டு சென்றது ,


முள் விறகு ஒன்று ...


பதறிப்போன நானும்


உடனே


விரைந்தேன் ...


அதற்குள்ளாக


காயமடைந்த விரலை


மருத்துவமனையில்


சேர்த்து ,


உமிழ் நீர் மருந்து,


செந்நீர் வடிதலை


வினாடிகளில் சரி செய்தது...






"கவனம் தேவை "


என்பதனை ,


உணர்ந்தவாறே ,


விரைவாக


சுள்ளிப் பொறுக்கபட்டுவிட்டது ...


ஆவாரன்கொடியினை அறுத்து ,


பொறுக்கிய சுள்ளிகளை அடுக்கி


இறுக பிணைந்தாள்..






இறுக்கம் அதிகம்தான்


விறகுகளும் வெடித்தது ,


மெதுவாக உடைந்தது ...


அணிந்திருந்த


தாவணி முந்தானை,


சுருமாடாக உருமாறி ,


சுள்ளிக்கட்டு தலையில் அமர்த்திக்கொண்டு


மாடுகளை ஓட்டிக்கொண்டு,


வீடு வழி பயணிக்க


கால்கள் நிந்தித்தபோது ,


"போறேன் ",


என்றவளின்


விழிகள்


வாசித்த வேளையில்,


என்னுள்ளும் வெறுமை


ஒற்றிக்கொண்டது ..






தலையில் விறகுக் கட்டு


சுமந்துகொண்டு ஊர்வலம்..


மாடுகள் வடம்பிடிக்க


அலுங்காமல் குலுங்காமல்


சிங்காரத் தேர் வஞ்சிக் காட்டில்


பவனி செல்கிறது


அவள் உருவில்....






பரிமாறிய வார்த்தைகளையும்,


தயங்கி,


வாய் வழி வர


மறுத்த வார்த்தைகளையும்


முணுமுணுத்துக்கொண்டு ,


நினைவுப் பக்கங்களை


மெதுவாக புரட்டிக்கொண்டு,


மாடுகளை ஓட்டிக்கொண்டும்


அந்தி சாயும் வேளையிலே,


ஒத்தையடி பாதையிலே,


மெல்ல மெல்ல அடியெடுத்து


வைத்து


வீடு வந்தடைந்தேன்....!



3/4/11

நீயும், நான் விரும்பும் நீயும்














உன்


கண்கள் ,வேகத்திலே


என்னை குத்தி வீழ்த்துதடி ...


உன்


கொலுசு , நடக்கயிலே


மெல்ல கொஞ்சி பேசுதடி ...


உன்


வாசம் ,மயக்கத்திலே


என்னை சுருட்டி போடுதடி ...


உன்


வார்த்தை ,கேட்கயிலே


நெஞ்சில் இனிக்குதடி ...


உன்


தேகம் ,தங்கத்திலே


கண்ணில் ஜொலிக்குதடி...


உன்


விரல்கள் , தீண்டயிலே


என் ஜென்மம் முடியுதடி ...


உன்


மௌனம் ,இதயத்தையே


தூக்கி வீசுதடி ...


மௌனம் ,இதயத்தையே


தூக்கி வீசுதடி ...


தூக்கி வீசுதடி ...

என் பிறவியின் பயன்? காதலோ !!!











சிப்பிக்குள் முத்தாக மாறும்வரை ,


நீர்த்துளிக்கும் தெரியாது ,


அதன் பிறவி எதற்கு என்று ...


ஓவியம் வரையும்வரை ,


தூரிகைக்கும் தெரியாது ,


அதன் பிறவி எதற்கு என்று ...


களைப்பில் வந்த பறவை கிளையில் அமரும்வரை ,


மரத்திற்கும் தெரியாது ,


அதன் பிறவி எதற்கு என்று ...


தேன்தேடி வண்டுவந்து அமரும்வரை ,


மலருக்கும் தெரியாது ,


அதன் பிறவி எதற்கு என்று ...


வைரமாக ஜொலிக்கும்வரை ,


மண்ணுக்குள் இருந்த கல்லுக்கும் தெரியாது ,


அதன் பிறவி எதற்கு என்று ...


உன்னோடு இணையும்வரை ,


எனக்கும் தெரியாது ,


என் பிறவி எதற்கு என்று ...


__________________________________________________________

நீயும், நானும்













நிலவு நீ ,


காரிருள் நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


இரவு இருக்கும் ...


ராகம் நீ ,


தாளம் நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


இசை இருக்கும் ..


எழுத்து நீ ,


ஓசை நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


மொழி இருக்கும் ..


வண்ணம் நீ ,


தூரிகை நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


ஓவியம் இருக்கும் ...


நினைவில் நீ ,


நிஜத்தில் நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


வாழ்க்கை இருக்கும் ...


வான் நீ ,


பூமி நான் ..


இரண்டும் சேர்ந்திருக்கும் வரையில்தான் ,


உலகம் இருக்கும் ...


அன்பு நீ ,


பாசம் நீ ..


இரண்டும் என்னோடு இருக்கும் வரையில்தான் ,


என்னுயிர் ஜீவிக்கும் ...